-
ஆள்தலும் அளத்தலும்
ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது. பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு. சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!