-
சாட்சி சொல்ல ஒரு மரம்
அரசியல், பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் – கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி – ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.
-
இருத்தலியமும் மார்க்ஸியமும்
பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.