• தெருக்களே பள்ளிக்கூடம்

    ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நாங்கள் நிறைமகிழ்வு அடைகிறோம். கனவொன்று நிஜமாதல்போல இது இக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வெளியே திறந்துகிடக்கும் கல்விவெளி எவ்வளவு பரந்துவிரிந்தது என்பதை இப்புத்தகம் நிச்சயம் நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டும். ஓராண்டு பள்ளிக்கல்வியைத் துறந்து, விடுமுறை எடுத்து பயணங்களின் வழியாகவும் களப்பணிகள் வழியாகவும் ராகுல் அல்வரிஸ் கற்றுக்கொண்ட வாழ்வனுபவத்தின் எழுத்துவெளிப்பாடே இப்புத்தகம். இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India – OFAI) தலைவராக இருந்தவரும், தேசிய அளவில் சூழலியல் சார்ந்த பெரும் பொறுப்புகளை வகித்த சூழலியலாளருமான ‘கிளாட் அல்வாரிஸ்’ அவர்களின் மகன் ‘ராகுல் அல்வரிஸ்’. பெரும் தொகையளித்து நாம் வளர்க்கிற ‘பள்ளிக்கூடம்’ என்னும் நிறுவனங்களால் வழங்க முடியாத ஒரு வாழ்வுக்கற்றலை, நம்மால் தெருவில் இறங்கிப் பெறமுடியும் என்பதற்கான நேரடிச்சாட்சியாக தன் மகன் ராகுல் மாறுவதற்கான முழுச்சுதந்திரத்தை அளித்தார் கிளாட் அல்வரிஸ். பெற்றோர் வழங்குகிற சுதந்திரமும், பிள்ளைகள் ஏற்கிற பொறுப்புணர்வும் ஒன்றுகுவியும் புள்ளியில் விடுதலைக்கல்வி மலர்கிறது. வெறும் வாழ்வனுபவ பயணக்குறிப்பு எனச் சுருங்கிவிடாமல், மீன், மண்புழு, சிலந்தி, ஆமை, காளான், பாம்பு, முதலை உள்ளிட்ட பல்வேறு உயிர்களைப்பற்றிய ஆவணத்தொகுப்பாகவும் இப்புத்தகம் முக்கியப்படுகிறது. புளியானூர் கிராமத்துக் குழந்தைகளுக்கான மாலைநேரத் திண்ணைப்பள்ளியையும், பொன்மணி முன்னெடுக்கும் பெண்களுக்கான தையல்பள்ளியையும், அர்விந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்புநாளன்றே தனது சேவைக்கரங்களால் திறந்துவைத்தார். அந்த மண்தரையில் அமர்ந்து அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தையின் விடுதலைக்கான கனவுவிதை. அதைத் தொடர்ந்து அவ்வப்போது அந்தக் கிராமத்துக் குழந்தைகள் காடுகள், பறவைகள், வனவுயிர்கள், நீரோடைகள் குறித்துச்சொன்ன எல்லாக் கதைகளும் தகவல்களும் ஒன்றே ஒன்றைத்தான் எங்களுக்குச் சுட்டிக்காட்டின. தெருக்களே மனிதனின் முதற்பள்ளிக்கூடம்! பள்ளிக்கூடங்களின் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் பாடப் புத்தகங்களுக்குள்ளும் கற்க இயலாத இயற்கையறிவை, குழந்தைகள் சுதந்திரமாகவும் எளிமையாகவும் பெற்றடைவது, விரிந்துபரவும் வீதிகளில் இருந்துதான்! ‘விளையாட்டுகளே உயரிய ஆய்வு வடிவங்கள்’ என்ற ஐன்ஸ்டீன் சொன்னதை யோசித்துப்பார்க்கையில், வகுப்பறைகளைவிட ஒரு பள்ளிக்கூடத்திற்கு மைதானம் எவ்வளவு முக்கியம் எனத் தெரியவரும்! அவ்வகையில் பார்த்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தெருவே முதற்குரு. எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ஒரு சிறுகதையின் ஒற்றைவரி இக்கணம் மனதில் உதிக்கிறது, “அழுக்கப்படாத படிப்பு படிப்பில சேத்தியா?”

    RM20.00