-
கன்னி (நாவல்)
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”