-
வாழ்க்கை ஒரு விசாரணை
பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.
பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.
– வல்லிக்கண்ணன்
-
பாவண்ணன் சிறுகதைகள் (முதல் தொகுதி)
பாவண்ணனின் சிறுகதைகள் கருணையின் இழைகளாலும் அன்பின் இழைகளாலும் நெய்யப்பட்டவை. கரிய இருள் சூழ்ந்த பாதையின் ஓரமாக காற்றில் நடுங்கியபடி ஒளியுமிழும் சுடரென அக்கதைகள் அமைந்திருக்கின்றன. எளிய மனிதர்களின் அவலம், இயலாமை, ஏமாற்றம், சமரசங்கள், பரவசங்கள், குமுறல்கள் ஆகியவற்றின் சித்திரங்களால் பாவண்ணன் கதையுலகம் நிறைந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உரியதாக உள்ள உலகத்தின் முன் எப்படியாவது உயிர்த்திருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் வாழும் கோடிக்கணக்கானவரின் கண்ணீர்த்துளிகளை பாவண்ணனின் சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. துயரத்தின் சுமைகள் தாளாது சரிந்து விழுவதையும் ஒரு நீண்ட பெருமூச்சின் வழியாக வலிமையைத் திரட்டிக்கொண்டு மீண்டு வருவதுமான வாழ்வின் ஆடலையும் விசித்திரத்தையும் பாவண்ணன் முன்வைத்திருக்கும் வாழ்க்கைத் தருணங்களில் காணமுடிகிறது. சின்னஞ்சிறிய சிமிழொன்றில் அடைத்து எடுத்துவரும் நீரின் வழியாக ஓர் ஆற்றையே காணமுடிந்த கண்கள், பாவண்ணனின் வாழ்க்கைத் தருணங்கள் வழியாக விரிந்துசெல்லும் எளியோரின் துயரத்தையும் வேதனை நிறைந்த உலகத்தையும் எளிதாகக் கண்டுவிடும்.