-
கசார்களின் அகராதி
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் என சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டு விடக்கூடாது என்ற அளவில் மிகக்கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால் மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடையனவற்றுக்கும் ஒரேமாதிரியான முடிவு சாத்தியமில்லை என்றார். இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு
வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக் கொண்ட இனக்குழுவொன்று, அதற்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிடவேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய – செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். நாவலைப் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றை சுவாரசியமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின்வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப்புள்ளியில் துவங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார்.