-
யுவன்சந்திரசேகர் சிறுகதைகள்
யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்லும் பாணிகளை முற்றிலும் நிராகரித்துவிடுகிறார் யுவன். வாழ்வின் அழகையும் அவலங்களையும் அவரது மொழியே இரண்டாகப் பிரித்துவிடுகிறது. அவரது நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் களைந்துவிட்டுப் பார்த்தாலும் இக்கதைகளின் ஜிவத் துடிதுடிப்பு பழுதுறுவதில்லை. இந்தக் கதைகளின் மிக முக்கியமான அம்சம், வாசகனின் பரந்துபட்ட பார்வையை, அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவையாக இவை இருப்பதுதான். சமூகம், உளவியல், தத்துவம் என்று பல்வேறு தளங்களில் இக்கதைகள் இயங்கினாலும் பூரணமான கலை அமைதியைப் பெற்றிருக்கின்றன். யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான 37 சிறுகதைகளின் முழுத் தொகுப்பு இது.
-
தலைப்பில்லாதவை
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘மணற்கேணி’ 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ‘தலைப்பில்லாதவை’ முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும், விலகி அடைந்த வளர்ச்சியாகவும் காணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட பக்க அளவுக்குள் கச்சிதமான சொற்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்ற அளவில் முன்னதன் தொடர்ச்சி. ஒரே பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டுப் பல முகங்கள், பல குரல்கள் கொண்ட கதைகளாக அமைந்திருப்பது விலகல். முதல் தொகுப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் கதைகள் என்பது வளர்ச்சி. படிக்க சுவாரசியமானவை, படித்த பின் யோசிக்க வைப்பவை என்பன இரண்டு தொகுப்புகளுக்குமான பொதுமை. ரத்தினச் சுருக்கமான, நயமான வரிகளிலான விவரணை, உரையாடல்களில் குவிமையத்தை விட்டு விலகாத இறுக்கம், அடிப்படை விவரிப்பின் சுழிக்குள் வாசக மனத்தை ஈர்த்துவிடும் கூறுமுறை – இவை இந்தக் குறுங்கதைகளின் இயல்புகள். புதிய இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகள் முன்வைக்கப்படும் இன்று சிறுகதை அளிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கும் சீரிய முயற்சியாக யுவன் சந்திரசேகரின் கையடக்கக் கதைகளைச் சொல்லலாம். இந்த வகைமையின் தனித்துவமான முன்னெடுப்பாகவும் இந்தத் தொகுப்பைக் காணலாம்