-
ஓநாய் குலச்சின்னம்
ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.