-
தனிக்குரல்
தனிக்குரல்
பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன்.
எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.
இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.
– ஜெயமோகன்