-
இரவு
பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.
-
கொற்றவை
“கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.
-
ரப்பர்
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் கண்ட ஒரு காட்சிதான். கார் மறுபக்கம் சென்றபின் சன்னல் வழியாக குழந்தைகளுக்குக் கையாட்டிச் சிரித்த அந்த இளைஞன், அவன் ஒரு நாவலாக மாறியிருப்பதை அறிந்திருக்கமாட்டான்
-ஜெயமோகன்