-
18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் பார்த்ததில்லை.
-
அக்கினி வளையங்கள்
மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
-
அஞ்சலை
இயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு.
-
இப்போது உயிரோடிருக்கிறேன்
25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் – வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல – பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள – உத்தியும் சவாலானதுதான் – இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.
-
இரவு
பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.
-
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
-
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.
-
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால்
புராணத்தில் மட்டும் தான் அப்படியா நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ‘ ஏழாம் உலகம்’ அந்த ஒருக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு, அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கி விடுவதில்லை. சிறந்த இயக்கிநருக்கான தேசிய விருது பெற்ற நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. -
கசார்களின் அகராதி
1984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் என சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டு விடக்கூடாது என்ற அளவில் மிகக்கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால் மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடையனவற்றுக்கும் ஒரேமாதிரியான முடிவு சாத்தியமில்லை என்றார். இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு
வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக் கொண்ட இனக்குழுவொன்று, அதற்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிடவேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய – செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். நாவலைப் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றை சுவாரசியமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின்வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப்புள்ளியில் துவங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார்.
-
-
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)
-
-
கொரில்லா
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்.
-
கொற்றவை
“கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது.
-
சப்தங்கள்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
-
சில நேரங்களில் சில மனிதர்கள்
(“சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன். -
தண்ணீர்
“சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்” என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது ‘தண்ணீர்’ நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை – நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் – ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை – பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.
-
தனிமையின் நூறு ஆண்டுகள்
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
-
-
தீம்புனல்
இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது. – மனுஷ்ய புத்திரன்