-
நள்ளிரவின் குழந்தைகள்
1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாளிணிந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று.
-
உருமாற்றம்
ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்.
காஃப்கா நவீனக் கலைமரபில் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிக்காசோ, மல்லார்மே ஆகியோருடன் வைத்து எண்ணத்தக்கவர் என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய கலை “புதிர் நிறைந்த தெளிவு. இலக்கியம் இது வரையில் சந்தித்திராத நம்மை உலுக்கிப் பிழியும் பூடகமான படைப்பு,” என்றார் ஒரு விமர்சகர். கவிஞர் டபிள்யு. எச். ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் தாந்தே என்று புகழ்ந்தார். -
காஃப்கா – கடற்கரையில்
தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.
-
ஓநாய் குலச்சின்னம்
ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.