Author | |
---|---|
Publications | காலச்சுவடு |
கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
RM20.00
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது. – சி. மணி (மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)
Out of stock
Related products
-
பொய்த்தேவு
சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.
-
புயலிலே ஒரு தோணி
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
-
சாயாவனம்
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.
-
கடலுக்கு அப்பால்
ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரியாகவே சொல்லலாம்.
-
தோட்டியின் மகன்
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
-
கோவேறு கழுதைகள்
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
-
மீஸான் கற்கள்
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
18வது அட்சக்கோடு
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் பார்த்ததில்லை.