-
ஒற்றறிதல்
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.
-
கடல்புரத்தில்..
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.
-
ரெயினீஸ் ஐயர் தெரு
தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது. – களந்தை பீர்முகம்மது
-
சிக்மண்ட் ஃபிராய்டு : ஓர் அறிமுகம்
சிக்மண்ட் ஃபிராயிட் உளவியலுக்கு முகம் கொடுத்தவர் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர் பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான் தனிமனித உளவியலையும் தாண்டி மதம் , மனித நாகரிகம் , கலை , இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்.
-
கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது. – சி. மணி (மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)
-
திருநங்கையர்: சமூக வரைவியல்
திருநங்கையர் சமூகத்தைப் பற்றிய விரிவான ஆய்வு நூல் இது. அவர்கள் அனைத்து உரிமைகளோடும் கெளரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழிதேடும் நோக்குடன், பரிவான பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது.
-
கு. அழகிரிசாமி சிறுகதைகள்
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் கால வரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.
-
-
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்
-
கிழவனும் கடலும்
நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.
-
குறத்தி முடுக்கு
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.
-
கடவுளுக்கு வேலை செய்பவர்
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.
-
பேரீச்சை
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.
-
-
சுகுமாரன் கவிதைகள்
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.
-
-
கருக்கு
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.
-
ஒளிரும் பச்சைக் கண்கள்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார். தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!
-
தீராப் பகல்
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை. –சுந்தர ராமசாமி 1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
-
அம்மா வந்தாள்
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.