-
-
கற்பனையான உயிரிகளின் புத்தகம்
பழங்காலத் தொன்மங்களிலும் ஆதாரங்களிலும் உலவும் கற்பனையான உயிரினங்களைப் பற்றிய செறிவடக்கக் கையேடு – போர்ஹெஸின் தனித்துவமான கூர்மொழியில் – மத்திமகால ஐரோப்பிய விலங்கியல் ஆய்வேடுகள், அவற்றின் செவ்வியல் முன்னோடிகள், கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள், நோர்ஸ் மற்றும் சீனாவின் புராணங்கள், இஸ்லாமிய மற்றும் பௌத்த நம்பிக்கைகள், நாட்டுப்புறப் பாடல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனதில் உதித்த கற்பனையான விலங்குகள் என யாவும் ஒரு தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகம் அகராதியின் (முழுமையானதாக இல்லாதபோதும்) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது; இந்தியத் தொன்மங்களில் காணக்கிடைக்கும் யாளியைப் போல 120 விசித்திரமான உயிரினங்களை பற்றிய குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. அது விவரிக்கும் உயிரினங்களும், யாளியைப் போல, உண்மையான உயிரினங்களின் வெவ்வேறு உறுப்புகளை ஒன்றிணைத்துக் கற்பனையாக உருவாக்கப்பட்டவையே. 1957 ஆம் வருடம் இந்தக் கையேடு வெளியானது. பிறப்பிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையை இழந்து கொண்டிருந்த போர்ஹெஸ், அதற்கு மேலும் தான் எழுதுவதை வாசிக்கவோ பார்க்கவோ முடியாமல் போனதொரு காலகட்டத்தில் வெளியான இந்தக் கையேட்டை, அவருடைய அகவுலகுக்கு மிகவும் நெருக்கமான படைப்பென நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.