-
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். ~ எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.