-
வளரொளி (தொகுதி 1)
இக்கதைகளின் ஊடாக தற்காலமும் அதன் சிக்கலும் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவது சுவாரசியம். ஒரே ஈழத்தின் இருவேறு முகங்களை அனோஜனும் அகர முதல்வனும் பேசுகிறார்கள். சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழல்’ ஒருவிதமான சுய உருவாக்கத்தையும் சுய அழிவையும் தன்னடையாளச் சிதைவையும் பேசுகிறது. அதே பேசுபொருளை வேறு கோணங்களில் கார்த்திகைப் பாண்டியனின் கதைகள் பேசுகின்றன. தூயன் பரந்துபட்ட களங்களின் ஊடாக நவீன காலத்தின் தன்னடையாள உருவாக்கத்தில் உள்ள சிக்கல்களைத்தான் பேசுகிறார். விஷால் ராஜாவும் கார்த்திக் பாலசுப்பிரமணியமும் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் சுரண்டலை, இருப்பை, நியாயத்தை என பல்வேறு விஷயங்களை வேறு உணர்வு நிலையில் நின்று பேசுகிறார்கள். சரவனகார்த்திகேயன் வரலாற்று ஆளுமையின் புனிதத்தை விலக்கிவிட்டு என்னவாக பொருள் படுகிறார் என நோக்க முயல்கிறார். பாலா சமகால வாழ்வின் அபத்தங்களை விமர்சன நோக்கில் எதிர்கொள்கிறார். மனிதனை காட்டிலும் பிரம்மாண்டமானவை கடவுளாக இருந்த காலகட்டம் கடந்து அவ்விடத்தை அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. கடவுள் யுகத்து பொருளின்மை இப்போது இன்னும் பூதாகாரமாக வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. கடவுளை போல் அல்லாது இவ்வமைப்புகள் குடும்பத்திற்குள்ளும் நுழைந்து ஆளுமை செலுத்துவதை இக்கதைகள் பேசுகின்றன. மானுட உறவின் சிக்கல்கள் மற்றும் நம்பகமின்மை ஒரு பொது இழையாக ஊடுருவிச் செல்கின்றன.
-
பாத்துமாவின் ஆடு
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.
-
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.
-
மீண்டு நிலைத்த நிழல்கள்
மலேசிய – சிங்கப்பூரில் முக்கியமான 25 ஆளுமைகளின் நேர்காணல்கள் அடங்கிய நூல்
RM60.00