Showing 181–200 of 361 results

  • தீக்கொன்றை மலரும் பருவம்

    பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.

    RM49.90
  • தாந்தேயின் சிறுத்தை

    கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.

    RM34.00
  • சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்

    சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.

    RM35.00
  • பழுப்பு நிறப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)

    என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். – சாரு நிவேதிதா

    RM110.00
  • காமரூப கதைகள்

    சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.

    RM50.00
  • கானகன்

    புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.

    RM28.50
  • கலகம் காதல் இசை

    என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை என்னி நான் பரவசமடைகிறேன். -மைக்கேல் ஜாக்ஸன்

    RM18.00
  • ஒளியின் பெருஞ்சலனம்

    974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக். (புத்தகத்திலிருந்து…)

    RM22.00
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 2020

    தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை. சாரு நிவேதிதா

    RM32.00
  • அரூ அறிவியல் சிறுகதைகள் 2019

    சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். -ஜெயமோகன்

    RM28.00
  • தன்மீட்சி

    இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.

    திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.

    இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.

    திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.

    தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.

    RM18.00RM20.00
  • யதி : தத்துவத்தில் கனிதல்

    யதி : தத்துவத்தில் கனிதல் “நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது நீர்சுழிக்கும் ஒலி ஏற்படுகிறது. ஓடை சிறு வெள்ளாடு போல தாண்டிக் குதிக்கிறது. அது கங்கையாகலாம். மந்தாகினியாக நடைபோடலாம். ருத்ர பிரயாகைக்கு வரும்போது பெயருக்கு ஏற்ப ரெளத்ர பிரவாகம்தான். காதுகளை உடைக்கும் பேரோசை. பிறகு ரிஷிகேசம். நீர் மலினமடைகிறது. காசியில் அதில் சகல பாவங்களும் கலக்கின்றன. கல்கத்தாவில் கங்கை கடல் போலிருக்கும். மறுகரை தெரியாது. அதன்மீது கப்பல்கள் நகரும். கடலும் கங்கையும் ஒன்றாகுமிடம் எவருக்கும் தெரியாது. ஆயிரம் ஒலிகள் அதன்மீது ஒலிக்கும். ஆனால் கங்கையும் கடலும் பேரமைதியில் மூழ்கியிருப்பதாகப்படும். பனிப்பாறையின் அதே அமைதி. நம் பனிப்பாறையை அனுபவமெனும் விரல் தீண்டும்போதுதான் விழிப்பு ஏற்படுகிறது. தீண்டப்படாத பனிப்பாறைகள் ஒருவேளை யுக யுகங்களாக அங்கேயே, யார் பார்வையும் படாத உயரத்தில், அப்படியே இருந்து கொண்டிருக்கக்கூடும். பெரும் செவ்விலக்கியங்கள் மெளனமானவை. அவை ஒரு மனதின் வெளிப்பாடுகளல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறைந்து கிடந்த ஒன்று உயிர் பெற்றெழுவது ஆகும். மனம் என்பது ஒரு தனிமனித அமைப்பல்ல. ஒரு பெரும் பொதுமை அது. காலாதீதமானது. தூலங்களில் மட்டும் ஈடுபட்டு ஆழ்ந்த அனுபவங்களை மறந்துபோன ஒரு தலைமுறையினர் நாம். துரியத்தின் தளத்தை நமது படைப்புலகில் நாம் அடைய முடியாது போகலாம்; காரணத்தின் தளத்தை தொடமுடியாது போகலாம்; குறைந்தபட்சம் பிரபஞ்ச சாரத்தின் ஒளி பரவிய கனவின் தளத்தையாவது தொட்டறிய முயல்வோம்.” ~ நித்ய சைதன்ய யதி

    RM55.00
  • தெருக்களே பள்ளிக்கூடம்

    ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நாங்கள் நிறைமகிழ்வு அடைகிறோம். கனவொன்று நிஜமாதல்போல இது இக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. பள்ளிக்கு வெளியே திறந்துகிடக்கும் கல்விவெளி எவ்வளவு பரந்துவிரிந்தது என்பதை இப்புத்தகம் நிச்சயம் நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டும். ஓராண்டு பள்ளிக்கல்வியைத் துறந்து, விடுமுறை எடுத்து பயணங்களின் வழியாகவும் களப்பணிகள் வழியாகவும் ராகுல் அல்வரிஸ் கற்றுக்கொண்ட வாழ்வனுபவத்தின் எழுத்துவெளிப்பாடே இப்புத்தகம். இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் (Organic Farming Association of India – OFAI) தலைவராக இருந்தவரும், தேசிய அளவில் சூழலியல் சார்ந்த பெரும் பொறுப்புகளை வகித்த சூழலியலாளருமான ‘கிளாட் அல்வாரிஸ்’ அவர்களின் மகன் ‘ராகுல் அல்வரிஸ்’. பெரும் தொகையளித்து நாம் வளர்க்கிற ‘பள்ளிக்கூடம்’ என்னும் நிறுவனங்களால் வழங்க முடியாத ஒரு வாழ்வுக்கற்றலை, நம்மால் தெருவில் இறங்கிப் பெறமுடியும் என்பதற்கான நேரடிச்சாட்சியாக தன் மகன் ராகுல் மாறுவதற்கான முழுச்சுதந்திரத்தை அளித்தார் கிளாட் அல்வரிஸ். பெற்றோர் வழங்குகிற சுதந்திரமும், பிள்ளைகள் ஏற்கிற பொறுப்புணர்வும் ஒன்றுகுவியும் புள்ளியில் விடுதலைக்கல்வி மலர்கிறது. வெறும் வாழ்வனுபவ பயணக்குறிப்பு எனச் சுருங்கிவிடாமல், மீன், மண்புழு, சிலந்தி, ஆமை, காளான், பாம்பு, முதலை உள்ளிட்ட பல்வேறு உயிர்களைப்பற்றிய ஆவணத்தொகுப்பாகவும் இப்புத்தகம் முக்கியப்படுகிறது. புளியானூர் கிராமத்துக் குழந்தைகளுக்கான மாலைநேரத் திண்ணைப்பள்ளியையும், பொன்மணி முன்னெடுக்கும் பெண்களுக்கான தையல்பள்ளியையும், அர்விந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்புநாளன்றே தனது சேவைக்கரங்களால் திறந்துவைத்தார். அந்த மண்தரையில் அமர்ந்து அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் ஒரு குழந்தையின் விடுதலைக்கான கனவுவிதை. அதைத் தொடர்ந்து அவ்வப்போது அந்தக் கிராமத்துக் குழந்தைகள் காடுகள், பறவைகள், வனவுயிர்கள், நீரோடைகள் குறித்துச்சொன்ன எல்லாக் கதைகளும் தகவல்களும் ஒன்றே ஒன்றைத்தான் எங்களுக்குச் சுட்டிக்காட்டின. தெருக்களே மனிதனின் முதற்பள்ளிக்கூடம்! பள்ளிக்கூடங்களின் வகுப்பறைச் சுவர்களுக்குள்ளும் பாடப் புத்தகங்களுக்குள்ளும் கற்க இயலாத இயற்கையறிவை, குழந்தைகள் சுதந்திரமாகவும் எளிமையாகவும் பெற்றடைவது, விரிந்துபரவும் வீதிகளில் இருந்துதான்! ‘விளையாட்டுகளே உயரிய ஆய்வு வடிவங்கள்’ என்ற ஐன்ஸ்டீன் சொன்னதை யோசித்துப்பார்க்கையில், வகுப்பறைகளைவிட ஒரு பள்ளிக்கூடத்திற்கு மைதானம் எவ்வளவு முக்கியம் எனத் தெரியவரும்! அவ்வகையில் பார்த்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தெருவே முதற்குரு. எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய ஒரு சிறுகதையின் ஒற்றைவரி இக்கணம் மனதில் உதிக்கிறது, “அழுக்கப்படாத படிப்பு படிப்பில சேத்தியா?”

    RM20.00
  • உப்புவேலி

    உப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் 2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம். சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.

    RM40.00
  • சிலேட்டுக்குச்சி

    குழந்தைகளின் உளவியலைக் கற்றுக்கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும். அதுமட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பதால் கூடுதலான வாசிப்பு இன்பத்தை இவை வாரி வழங்குகின்றன. – ச தமிழ்ச்செல்வன்

    RM11.00
  • 100 சிறந்த சிறுகதைகள் (2 பாகங்கள்)

    ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு – எஸ்.ராமகிருஷ்ணன்

    RM110.00
  • பெரியார்: இன்றும் என்றும்

    சமுதாயம், மதம், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுவதும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தலைப்புகள் காலம், இடம் விவரங்களுடன் அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

    RM72.00
  • சாட்சி சொல்ல ஒரு மரம்

    அரசியல்,  பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் – கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி – ‘சாட்சி சொல்லும் மரமா’க உருக்கொள்கின்றன. சமத்துவமும் நீதியும் நிறைந்த சமுதாயம் பற்றிய கனவுகள், கற்பனைகள், செயல் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் விழுங்கி விடுவதில் ‘கருந் துளையை’ ஒத்த நமது சமகால உலகம் தரும் முற்றிலும் எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்து நம்மை ஓரளவு மீட்டு ஆறுதலளிக்கும், ஆசுவாசப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகள் சில இயன்ற அளவு எளிமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதேவேளை அவற்றினூடே வெளிப்படும் சமூகவியல், அரசியல், தத்துவப் பார்வைகள் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.

    RM60.00
  • இருத்தலியமும் மார்க்ஸியமும்

    பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

    RM28.50