-
கடல்புரத்தில்..
RM16.00இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ணநிலவன் இந்த யதார்த்தத்தை உள்ளபடி முன்வைக்கிறார். அது வண்ணநிலவன் பாணியிலான கலை அம்சம் கூடிய யதார்த்தம். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள், ‘உன் மீது நான் அன்போடு இருக்கிறேன் பார்’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. ‘உன் அன்பை நான் புரிந்துகொண்டேன்’ என மறுமொழி தருவதும் இல்லை. இரு மனங்களுக்கிடையே நடைபெறும் மௌனமான உரையாடல் அது. அந்த மௌனத்தை வண்ணநிலவனால் பிரமாதமாக மொழிபெயர்த்துவிட முடியும்.
Only 1 left in stock
-
ரெயினீஸ் ஐயர் தெரு
RM1,200.00தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது. – களந்தை பீர்முகம்மது
Only 1 left in stock
-
கரைந்த நிழல்கள் (காலச்சுவடு பதிப்பகம்)
RM22.00அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று.தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதிபகுதியாகவும், நாவலின் நேர்த்தியில் ஈடுபட்டுத் திரும்பவும் ஒரு தடவை முதலிலிருந்து கடைசி வரை ஒரே மூச்சிலும் படிக்க நேர்ந்த பிறகு, ‘கரைந்த நிழல்கள்’ அசாதாரணமான சாதனைதான் என்பது நிச்சயமாகிறது. – சி. மணி (மார்ச் 1977இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பிலிருந்த பின்னுரையிலிருந்து)
Out of stock
-
கருக்கு
RM15.00செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.
Only 2 left in stock
-
மிளிர் கல்(நாவல்)
RM23.00மிளிர் கல்(நாவல்) – இரா.முருகவேள் :
சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் – நீர்நிலைகள் – தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.Only 1 left in stock
-
கன்னி (நாவல்)
RM44.00ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”
Out of stock
-
அம்மா வந்தாள்
RM22.50‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
Only 1 left in stock
-
வெண்ணிறக் கோட்டை
RM22.50ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.
Out of stock
-
மைத்ரி (நாவல்)
RM30.00உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
Only 1 left in stock
-
அஞ்சல் நிலையம்
RM30.00அஞ்சல் நிலையம்
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன.
Out of stock
-
மூத்த அகதி
RM29.00ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை என் வாழ்வில் இருந்துதான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் கால்கள் எப்போதும் பூமியில் பதிந்திருப்பதையே விரும்புகிறேன். எந்த நிலமும் சொந்த மில்லாத இந்த அகதி வாழ்வில் இருந்தே ‘மூத்த அகதி’ நாவலை எழுதி முடித்திருக்கிறேன். உலகில் மிகவும் துயரமானது எது என்று கேட்டால், ‘ஒரு அகதி தன்னுடைய வாழ்வியல் துயர்களை விளக்கி கூற முயல்வது’ என்றே கருதுகிறேன். அகதி வாழ்வை எழுத முயல்வது கூட அதற்கு நிகரானதுதான். எவ்வளவு முயன்றாலும் அதை விளக்கி விட முடியாது. அதை அகதியாக இருக்கும் ஒருவனால்தான் உணர முடியும். நான் ஏன் பதட்டமாகிறேன்? நான் ஏன் பலகீனமாக உணர்கிறேன்? நான் ஏன் ஒதுங்கி கொள்கிறேன்? இப்படி எழும் அத்தனை கேள்விகளுக்கும் ஒரேயொரு பதில் தான் இருக்கிறது. ‘என் பெயர் அகதி’ என்பதுதான் அந்தப் பதில்.
Out of stock
-
ஆலகாலம்
RM54.00கலைச்செல்வியின் முதல் நாவலான சக்கைக்கும் இந்த நாவலுக்கும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும், இருபது வருடங்களைக் கடந்த முதிர்ச்சி மொழிநடை மற்றும் உள்ளடக்கத்தில் தெரிகின்றது. நாவலின் பல இடங்களில் மொழியானது. காவேரியின் பிரவாகம் போல் பெருகி ஓட்டமெடுக்கிறது. மானிட இனத்தின் நேரங்களில் சாபங்களும் வடிவம் வரங்கள். தனிமையும், தேடலும் அவையே இந்த நாவலின் முக்கியமான கருப்பொருள்கள் இவை இரண்டுமேயாகும். கலைச்செல்வி அதற்கு கலை வடிவம் கொடுத்திருக்கிறார்.
– சரவணன் மாணிக்கவாசகம்
Out of stock
-
அல் கொஸாமா
RM32.00ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 தேர்ந்தெடுக்கபட்ட நூல் வரிசை சமகால வாழ்விலிருந்து தொடங்கி பின் நோக்கியும் முன் நோக்கியும் பயணிக்கும் இப்புதினம் ‘பதூவன்’ எனக் கூறப்படும் அரபு மூலக்குடிகளின் வாழ்வியல், புலம் பெயர்ந்த இந்தியர்களின் தினசரி, கவிதை, வன்மம், காமம், பின்- பின் நவீனத்துவ தத்துவம், ஆதி மனித வேட்கை, பாலைவனம்,’ஜின்’ எனும் மாய வலை, இயற்கை என்று பல எல்லைகளைக் கொண்ட ஒரு எல்லையற்ற புனைவு. தமிழுக்கு மட்டுமல்லாமல் இந்தியா இலக்கியத்திற்கே புதிய கதைக்களத்தை அறிமுகப் படுத்தியிருக்கும் இந்த ‘அல் கொஸாமா’ வாசகர்களின் கண்களில் முடிவற்ற நிலப்பரப்பை ஸ்ருஷ்டிக்கும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இல்லை.
Out of stock
-
ஹரிலால்
RM30.00“மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக் கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில் தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும் உள்ளூர விழைபவராகவும் அதற்காக கணவரிடம் உரையாடுபவராகவும் காணப்படுகிறார். தன் முயற்சிகளில் அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது. ஹரிலால் மூன்றாவது தரப்பு. இளைய காந்தி என பட்டப்பெயர் சூட்டி மற்றவர்கள் அழைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சி அடையும் அவர் மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதன் வழியாக எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு அவரால் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாதவராக தடுமாறுகிறார். தன் தந்தை வகுத்தளிக்கும் வழியின் மீது அவநம்பிக்கையுற்று தனக்கு முன்னேற்றமளிக்கும் வேறொரு வழியை நாடி குடும்பத்துடன் முரண்கொள்கிறார் ஹரிலால். சில ஆண்டுகளுக்கு முன்பாக சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலை எழுதினார். அதில் காந்தியடிகளைப்பற்றிய பல தகவல்களை, பாத்திரங்களுடைய உரையாடல்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். இப்போது, காந்தியடிகளையே ஒரு முக்கியமான கதைப்பாத்திரமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறப்பான தமிழ் நாவல் வரிசையில் கலைச்செல்வியின் இந்நாவலுக்கும் இடமுண்டு.”
Out of stock
-
கதீட்ரல்
RM22.00பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.
Out of stock
-
நட்சத்திரவாசிகள்
RM29.00புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது அதன் கருதுகோள்கள் , சரிநிலைகள் , பண்பாடு , பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும் எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது
Out of stock
-
வௌவால் தேசம்
RM32.00சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது. ஆண்டுக்கு ஆறு மாசம் தண்ணீர் மீதி ஆறு மாசம் வறண்டு கிடந்த தாமிரவருணி, எப்படி வற்றாத ஜீவநதியாகப் பிரவாகித்தது என்பதை அறிகிற போது நாம் ஆச்சரியத்தால் உறைந்து போகிறோம். புனைவுகளாலும் படிமங்களாலும் வரலாற்றை அடுக்காமல், குவிக்காமல் கச்சிதமாக நெய்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றின் நரம்புகளை மீட்டும் போது நிறைய இடங்களில் ஆன்மிகத்தின் ஒலியே கேட்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் எதிர்மறைக் குணங்களை வௌவாலின் குணங்களுக்கு ஒப்புமைப்படுத்தி, வௌவால் தேசத்தை உருவாக்கி, அதில் நம்மையும் ஒரு அங்கமாக்கிவிடுகிறார். பல ஜமீன்தார்களை, வீரர்களை வேட்டையாடிய பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜெனரல், வௌவால் தேசத்தில் ஒரு வௌவாலாகப் பறந்து திரிகிறார். மனிதனை ஒரே இரவில் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் செய்த ஒரு பிரெஞ்சு எழுத்தாளனைப் போல, சோ. தர்மன் மனிதனை வௌவாலாகவும் வௌவாலை மனிதனாகவும் உருமாற்றி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். இதன்மூலம் வௌவால் தேசத்திற்குள் நுழையும் நாம் ஒவ்வொருவரையும் பெரும் சிரிப்பில் ஆழ்த்தி வேறொரு உயிப்பிராணியாக உருமாற்றுகிறது இந்த நாவல்.
Out of stock
-
இப்போது உயிரோடிருக்கிறேன்
RM37.0025 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் – வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல – பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள – உத்தியும் சவாலானதுதான் – இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.
Only 1 left in stock
-
எண்கோண மனிதன்
RM30.00நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் – தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரிதான். என்றாலும், எத்தனை நூற்றாண்டுப் பழைய வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் மானசீகத்தில் எவ்வளவு தீர்க்கமாக மீட்டுருவாக்க முடிந்திருந்திருக்கிறது அவர்களால். அவற்றில் ஒரு தர்க்கத் தொடர்ச்சியை நிறுவிக்காட்டவும் முடிந்திருக்கிறது… வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைக்கும்போது, அவர்களுக்குப் புராதன நாட்களிலும், சமகாலத்திலும் ஒரே சமயத்தில் காலூன்றி நிற்க வாய்த்திருக்கும்தானே…. – நாவலிலிருந்து
Out of stock
-
கபடவேடதாரி
RM53.00‘முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.’ – மோகன் சுவாமிநாதன் ‘Amazing Socio-Political satire.’ – கார்த்திக் ‘மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.’ – ராஜா செல்வராஜ் ‘கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா.’ – ராஜேஸ்வரன் ராமமூர்த்தி ”வித்தியாசமான எழுத்து. வித்தியாசமான சிந்தனை. வித்தியாசமான நடை. தமிழின் ஜார்ஜ் ஆர்வெல். Excellent.’ – இந்துமதி ‘மன வக்கிரம் உள்ள ஒரு கிறுக்குப் பிடித்த பைத்தியக்காரன் எழுதிய கதை’ – ரவிச்சந்திரன் ‘முழுதும் ஃபேஸ்புக்குக்குள் நடக்கும் கதை. அங்குள்ள fake idகள், அவரவர் அரசியல் சார்பு, முட்டல் மோதல்கள், ஆஃபாயில் ஐடியாலஜிகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல்.’ – சித்ரா கோகுலகிருஷ்ணன்.
Out of stock




















